கிள்ளான், செப்டம்பர்.13-
எஸ்டிபிஎம் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகச் சேர்க்கைகளில் நிராகரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடம், அவரை விடத் தகுதியில் குறைவான மாணவருக்கு வழங்கப்படுவது என்பது கல்வியின் உண்மைத்தன்மைக்குத் துரோகம் இழைப்பது போலானது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் விமர்சித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாற நினைக்கும் மலேசியா, தொடர்ந்து இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டி வருவது, எதிர்காலச் சந்ததியினருக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில், இதற்கான உடனடித் தீர்வாக பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
“சமூக இயக்கத்திற்குக் கல்வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகும். குறிப்பாக பொதுப் பல்கலைக்கழகங்கள், பல இளம் மலேசியர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நுழைவாயிலாகும். என்றாலும், ஒவ்வோர் ஆண்டும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகச் சேர்க்கைகளில் அநீதியைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
“குறிப்பாக Sijil Tinggi Persekolahan Malaysia (STPM)- தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காமல் வேதனையடைகின்றனர். அதே வேளையில், ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, மெட்ரிகுலேஷன் பாடத் திட்டங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்கள் கிடைக்கின்றன.
“இந்த ஏற்றத்தாழ்வு எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும் கூட, யாரும் பேசாமல் தவிர்த்து வரும் பிரச்சினையாகி விட்டது. மருத்துவம், மருந்தகம், சட்டம் அல்லது பொறியியல் சேர்க்கைகளில் பாடங்கள் அனைத்திலும் நேரடி A பெற்ற மாணவர்கள் கூட நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வரும் போது, நமது அமைப்பு நியாயமாகத் தான் செயல்படுகின்றது என பாசாங்கு செய்ய முடியாது. இதனால் தான் பெற்றோர்களும், மாணவர்களும் ஆத்திரமடைகின்றார்கள்.
“கல்வியில் சிறந்து விளங்க இவ்வளவு காலம் பாடுபட்ட பின்னர், முன்னேறி செல்ல வேண்டிய பாதையோ, தகுதியின் அடிப்படையில் இல்லாமல், நியாயமற்ற அமைப்பால் தடுக்கப்பட்டால், இவ்வளவு காலம் அதற்காக முயற்சி செய்வதன் பயன் தான் என்ன? STPM தேர்வு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, கடுமையானது மற்றும் அதிக உழைப்பு தேவைப்படக் கூடியது. மாணவர்கள் தங்களின் உயர்நிலை சிந்தனையைச் சோதிக்கும் இந்த மதிப்பீடுகள் மற்றும் தேர்வுகளில் இரண்டு முழு ஆண்டுகளை செலவிடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது” என்று கணபதி ராவ் வலியுறுத்தியுள்ளார்.
கல்வியின் உண்மைத் தன்மைக்கு செய்யும் துரோகம்
“பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூட STPM - ஐ A நிலைகளுக்குச் சமமாக ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் உள்நாட்டிலோ STPM தேர்ச்சியாளர்கள், மெட்ரிகுலேஷன் மாணவர்களுடன் ஒப்பிடப்படும் போது ஓரங்கட்டப்படுகிறார்கள். மெட்ரிகுலேஷன் மாணவர்கள் வெவ்வேறு தர நிர்ணயங்களுடன் கூடிய ஒரு வருட திட்டத்தையே மேற்கொள்கிறார்கள்.
“மெட்ரிகுலேஷன் முடிவுகளுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு முறையும் முக்கியத்துவமும், STPM மாணவர்கள் அதிக தேவை உள்ள படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துள்ளது. அவர்களின் முயற்சிக்கும் திறமைக்கும் சமமான வெகுமதி அளிக்கப்படுவதில்லை. இது தொடரும் பட்சத்தில், கல்வியில் சிறந்து விளங்குபவர்களை ஊக்கப்படுத்தாமல், ஒற்றுமைக்குப் பதிலாக பிளவுபடுத்தும் கட்டமைப்புகளை நிலைநிறுத்தும் அபாயத்தில் உள்ளோம்.
“அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் என்பது அனைத்து இனம், மதம் மற்றும் பின்னணிகளைக் கொண்டவர்களால் நிதியளிக்கப்படும் ஒன்று. எனவே, அவை திறந்த, வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் சேர்க்கை நடத்த வேண்டும். ஒரு நேரடி-A எடுத்த STPM மாணவருக்கு மருத்துவச் சேர்க்கை மறுக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, மெட்ரிகுலேஷன் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மற்றொருவருக்கு அந்த இடம் கிடைக்கும் போது, கல்வியின் உண்மைத் தன்மைக்கு துரோகமாக அது கருதப்படும்.” என்றும் கணபதி ராவ் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு தான் என்ன?
“இப்பிரச்சினைக்கெல்லாம் தீர்வு ஒன்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான அனைத்து வழிகளும், அதாவது அவை STPM, மெட்ரிகுலேஷன், அசாசி, A நிலைகள், டிப்ளமோ அல்லது அடித்தளம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அவற்றிற்கு ஒரு பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அவசியம்.
“அரசாங்கப் பணிகளுக்கு எப்படி சவாலான தேர்வுகள் இருக்கின்றனவோ அது போது பல்கலைக்கழக சேர்க்கைகளுக்கும், எல்லோருக்கும் பொதுவான ஒரு நுழைவுத்தேர்வு மிக அவசியம். அப்படி ஒரு நுழைவுத் தேர்வு அனைத்து மாணவர்களும் ஒரே அளவுகோலில் அளவிடப்படுவதை உறுதி செய்கிறது.
“இது ஒருசார்பு எண்ணங்களை நீக்குகிறது, ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கிறது மற்றும் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. மிக முக்கியமாக, பல்கலைக்கழக சேர்க்கையில் தகுதியை முன்நிறுத்த உதவுகிறது” என்றும் இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார் கணபதி ராவ்.
மிக அவசரம் – அலட்சியப் போக்கு வேண்டாம்
“மலேசியா ஒரு வளர்ந்த நாடாக இருக்க விரும்புகிறது. ஆனால் தங்களது புத்திசாலித்தனமான எண்ணங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியப்படுத்தப்படுவதாக இளைய தலைமுறையினரை உணர வைத்தால், அதை நாம் அடைய முடியாது.
“நியாயமான கல்வி முறை என்பது பல்கலைக்கழக நுழைவு மட்டுமல்ல - அது தேசத்தை கட்டமைப்பது, திறமையை வளர்ப்பது மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் அவரது திறமைக்கும், கடின உழைப்பிற்கும் வெகுமதி அளிப்பதை உறுதி செய்வது ஆகும்.
“இது போல் நியாயம் கேட்பது ஒன்றும் புதியதல்ல, ஆனால் இது மிக அவசரமானது. நமது இளைஞர்கள் தெளிவான, சமத்துவமான வாய்ப்புகளுக்குத் தகுதியானவர்கள் – சாக்குப்போக்குகளுக்கோ அல்லது அரைகுறை நடவடிக்கைகளுக்கோ அல்ல.
“எனவே, அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட வேண்டிய நேரம் இது. ஒரு பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தி, தகுதியுடையவருக்கான சேர்க்கையை உயர்கல்வியின் அடித்தளமாக மாற்றவும். அதை செய்யாமல் இருப்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு துரோகம் இழைப்பது போலானது” என்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான கணபதி ராவ் எச்சரித்துள்ளார்.








