கோலாலம்பூர், டிசம்பர்.03-
கடந்த மாதம், மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய ஆடவர்கள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆடவர்களின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மலாக்கா போலீசார், அந்த மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, கிடைக்கப் பெற்ற ஆடியோ பதிவு மற்றும் தடயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டதில் அந்த மூன்று இளைஞர்களும் மரணத் தண்டனை நிறைவேற்றும் பாணியில் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்களைப் போல் காணப்பட்ட அந்த மூவரையும் கைது செய்வதற்குப் போலீசார் முயற்சி செய்த போது, அவர்கள் பாராங்கினால் தாக்கியதில் போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்ததாகவும், தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், இது மரணத் தண்டனை நிறைவேற்றும் பாணியில் நடந்த திட்டமிட்டக் கொலையாகும் என்று பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருடன் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தங்களிடம் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தடயவியல் புலன் விசாரணை நிறுவனம் ஒன்றின் தடயவியல் தலைமை நிபுணர் ஜி. விநோதன் மேற்கொண்ட சோதனையில், எந்தவொரு பாராங் தாக்குதலும் நடக்கவில்லை. அந்த மூவரும் காரிலிருந்து வெளியேற்றப்பட்டு, நேரடியாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் போலீஸ்காரர்கள் இடையில் நடந்த உரையாடலில் காரின் போனட் மற்றும் walkie- talkie என்று மட்டுமே பேசப்பட்டதே தவிர பாராங் கண்டுபிடிக்கப்பட்டதாக யாரும் உச்சரிக்கவில்லை என்று ராஜேஸ் நாகராஜன் விளக்கினார்.
தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற சூழ்நிலை சாட்சிகளின் அடிப்படையில் பார்க்கும் போது அந்த மூன்று இந்திய ஆடவர்களும் காரிலிருந்து வெளியேற்றப்பட்டு, மண்டியிட்டு உட்கார வைக்கப்பட்டு, execution stlyle என்று கூறப்படும் மரணத் தண்டனை பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
பிரேத சோதனையில் தோட்டாக்கள் அனைத்தும் உடலில் மேலிருந்து கீழாகப் பாய்ந்துள்ளன. இது நீதித்துறைக்கு புறம்பான அல்லது மரணத் தண்டனை பாணியிலானக் கொலையாகும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் வர்ணித்தார்.
இதன் மூலம் அந்த மூன்று ஆடவர்களும் மண்டியிடப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. துப்பாக்கித் தோட்டாக்கள், மேலிருந்து நுழைந்து, மூக்கிலிருந்து தொடங்கி இதயத்திற்குள் நுழைந்துள்ளன. இது உயிரைக் கொல்வதற்கு துப்பாக்கியில் கையாளப்படுகின்ற ஒரு வழிமுறையாகும் என்று ராஜேஸ் நாகராஜன் வர்ணித்தார்.
இதன் தொடர்பில் மூன்று இந்திய இளைஞர்களையும் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்களான ராஜேஸ் நாகராஜன், Sachpreetrai Singh மற்றும் மலேசிய ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.








