கோலாலம்பூர், மார்ச்.15-
அரசாங்கம் அறிவித்துள்ள நோன்புப் பெருநாள் கூடுதல் பொது விடுமுறையை முன்னிட்டு, தனியார் துறை முதலாளிகளும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பது அல்லது நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என மனித வள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விடுமுறை 1951-ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது 1955-ஆம் ஆண்டு வேலைச் சட்டத்தின் கீழ் தனியார் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும், முதலாளிகள் இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாளை மாற்றாக வழங்கலாம் என்றும் அமைச்சு விளக்கியுள்ளது. ஒரு வேளை கூடுதல் விடுமுறை தினத்தன்று ஊழியர்கள் பணியாற்ற நேரிட்டால், அவர்களுக்குரிய பொது விடுமுறை கால கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மனித வள அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.








