கோலாலம்பூர், டிசம்பர்.03-
கடந்த வெள்ளிக்கிழமை கோலாலாம்பூர் செள கிட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 208 பேரை நீதிமன்றத்தில் நிறுத்துவதில் 24 மணி நேரத்தைக் கடந்து விட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் போலீசார் விதிமுறைகளை மீறவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் போலீசார் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
அந்த 208 பேரை, விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி கோரிய போலீசாரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் வைப்பதற்கு போலீசார் 24 மணி நேரத்திற்குள் தடுப்புக் காவல் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இதில் 24 மணி நேரம் கடந்து விட்டதால் போலீசாரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனினும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்த 208 பேரை பதிவு செய்வது மற்றும் அவர்களுக்கான நீதிமன்ற ஆவணங்களைத் தயாரிப்பதில் அதிக நேரம் கடந்து விட்டது. இது விதிமுறை மீறில் அல்ல என்று ஃபாடில் மார்சுஸ் விளக்கினார்.








