Oct 18, 2025
Thisaigal NewsYouTube
முதிர்ச்சிப் பெற்ற கல்வி அமைச்சர் தேவை- டான் ஶ்ரீ குமரன்
தற்போதைய செய்திகள்

முதிர்ச்சிப் பெற்ற கல்வி அமைச்சர் தேவை- டான் ஶ்ரீ குமரன்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

இருநூறு கத்திக் குத்துகளுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவி பயின்ற டாமான்சாரா இடைநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் துணைத்தலைமை ஆசிரியரையும் கல்வி அமைச்சு இடமாற்றம் செய்ததற்கு பதிலாக அவர்களைப் பணி இடைநீக்கம் செய்திருக்க வேண்டும் என்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய முன்னாள் துணை அமைச்சர் டான் ஶ்ரீ குமரன் குறிப்பிட்டார்.

பள்ளித் தலைமையாசிரியரும், துணைத் தலைமையாசிரியரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால் , அது மாணவியை இழந்த பெற்றோருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் கல்வி அமைச்சின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் என்று டான் ஶ்ரீ குமரன் தெரிவித்தார்.

ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாற்றுவது போல அமைந்துள்ள இந்தச் செயல், கல்வி அமைச்சின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் புறநகர் மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான டான் ஶ்ரீ குமரன் குறிப்பிட்டார்.

பாலியல் குற்றத்திற்காகக் காவல்துறையின் விசரணைக்கு உட்பட்டிருக்கும் மலாக்கா இடைநிலைப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் ஐந்தாம் படிவ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் நல்லெண்ணத்துடன் கூறினாலும் அது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிற்து. காரணம், எந்த ஒரு மாணவனின் எதிர்காலமும் பாதிக்கக்கூடாது என்பது பொது கருத்து. பாலியலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்களா இல்லையா என்பது தெரியாத நிலையில், பொது வெளியில் இந்தக் கருத்தைப் பகிராமல் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலப் பாதுகாப்பு உறுதிமொழி போன்ற கருத்தைப் பேசியிருக்கலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பொதுவாக பள்ளிகளின் கட்டொழுங்கு நாளுக்கு நாள் குறைந்து வருவது அச்சமளிக்கிறது. நல்ல குடிமக்களையும் தலைவர்களையும் உருவாக்கும் மையங்களாகப் பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டும் என்று டான் ஶ்ரீ குமரன் ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related News