ஜோகூர் பாரு, ஜூலை.29-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, ஶ்ரீ ஆலாமைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் காணாமல் போவதற்கு முன்பு, அந்தச் சிறுவனின் வீட்டில் மிகச் சத்தமாகக் கடும் வாக்குவாதம் நடந்ததாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கணவன்-மனைவி இடையே நடக்கும் சாதாரண குடும்பத் தகராறு என்றே ஆரம்பத்தில் தாங்கள் கருதிய விஷயம், அந்தச் சிறுவன் காணாமல் போன நிலையில், அவனது உடல், நெகிரி செம்பிலானில் உள்ள ரொம்பினில் புதைக்கப்பட்டச் செய்தியைக் கேட்டு தாங்கள் அதிர்ந்துப் போனதாக அண்டை வீட்டுக்காரரான 47 வயது கமாருடின் அப்துல்லா தெரிவித்தார்.
ஒரு சிறுவனின் அழுகைச் சத்தத்தையும், அவனது பெற்றோருக்கு இடையே உரத்த வாக்குவாதங்களையும் தாங்கள் அடிக்கடி கேட்பதுண்டு என்று கமாருடின் கூறினார்.
அவர்கள் அவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபடும் போது, அந்தச் சிறுவன் அழும் சத்தத்தைத் தங்கள் குடும்பத்தினர் உட்பட அக்கம் பக்கத்தினரும் கேட்பதுண்டு என அவர் குறிப்பிட்டார்.
அந்தக் குடும்பத்தினர் அண்டை வீட்டுக்காரர்களிடம் பேசுவது மிக அரிதாகும். தங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.
அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து அறிய முடியாவிட்டாலும் நேற்று திங்கட்கிழமை காலையிலிருந்து அந்த வீட்டிற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் வருவதும், போவதுமாக இருந்தது தங்களுக்கு பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கமாருடின் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட தம்பதியர், சுமார் ஒரு மாதமாக வீட்டில் தங்குவதில்லை. அவ்வப்போது மட்டுமே வருவார்கள். கணவன், மனைவி ஒன்றாக வர மாட்டார்கள். தனித் தனியேதான் வருவார்கள்.
மூன்று பேர் கொண்ட அந்தக் குடும்பத்தினர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் இப்பகுதியில் குடியேறினார்கள். சிறுவனையும் கடந்த சில நாட்களாகத் தாங்கள் பார்க்கவில்லை. ஆனால், வீட்டிலிருந்து பலத்த சத்தத்துடன் கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை மட்டும் தங்களால் கேட்க முடிந்ததாக கமாருடின் குறிப்பிட்டார்.
6 வயது சிறுவன், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவனது 36 வயது தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளதாக ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை வழக்கு நெகிரி செம்பிலான் ஜெம்போல் மாவட்ட நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள வேளையில், சிறுவன் காணவில்லை என்று பொய்யான போலீஸ் புகார் அளித்ததற்காக அவனது தந்தையைக் குற்றவியல் சட்டம் 182 ஆவது பிரிவின் கீழ் தாங்கள் விசாரணை செய்து வருவதாக ஏசிபி குமரேசன் குறிப்பிட்டார்.








