கோலாலம்பூர், செப்டம்பர்.20-
தவறான செய்திகளை வெளியிட்டதற்காக இரு மலேசிய நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 1 லட்சம் ரிங்கிட் அபராதம் குறித்து பாஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜாலூர் கெமிலாங் கொடியைக் குறைப்பாட்டுடன் வெளிட்டதற்காக சின் சியூ சீன நாளிதழுக்கும், போலீஸ் படைத் தலைவர் பற்றிய தவறான செய்திக்காக சீனார் மலாய் நாளிதழுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதம், “ஊடக மிரட்டல்” என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விதித்துள்ள இந்த அபராதம், அரசியல் மற்றும் அரசாங்க எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஊடகங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியைக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இரு நாளிதழ்களும் ஏற்கனவே தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில், அதுவே போதுமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








