இந்தோனேசியாவின் பாலியில் ஸ்குபா டைவிங் எனப்படும் முக்குளிப்பு விளையாட்டில் ஈடுபட்ட 40 வயதான மலேசிய பெண் ஒருவர், கடலில் ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சித்தி நுராய்னி ருசிடி என்ற அந்தப் பெண், நேற்று புதன்கிழமை காலை 11.10 மணியளவில் முக்குளிப்பு பயிற்றுனர், படகுத் தலைவர் மற்றும் மேலும் சிலர் அடங்கிய குழுவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
முதல் முக்குளிப்பு இடமான மந்தா பே-யில் சித்தி நுராய்னி இருமிக் கொண்டிருந்ததைக் கவனித்த 33 வயதான பயிற்றுனர் Eugenius Franciso Ray அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.
தொடர்ந்து முக்குளிப்பு மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, குழுவினர் முதல் முக்குளிப்பை முடித்துவிட்டு கிரிஸ்டல் பே பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மிகவும் வலுவான கடல் நீரோட்டம் ஏற்பட்டதால், மூன்று முக்குளிப்பாளர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் சித்தி நுராய்னியும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








