கிளந்தான் மாநிலம், தும்பாட் பகுதியில், பிரேக் பழுதானதாக கூறப்படும் ஆம்புலன்ஸ் ஒன்று, 2 கார்களில் மோதியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்தது.
சிம்பாங் தீகா கம்போங் நெட்டிங் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த புரோட்டோன் வாஜா மற்றும் பெரோடுவா விவா கார்களில் மோதியதாக தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் கைரி ஷாஃபி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் புரோட்டோன் வாஜா காரை ஓட்டிய 33 வயது பெண்ணுக்கு தலையிலும், பெரோடுவா விவா காரை ஓட்டிய 29 வயது பெண்ணுக்கு இடது முழங்காலிலும் காயம் ஏற்பட்டது. இருவரும் தும்பாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்றும், அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது இல்லை என்பதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








