பூலாவ் கேத்தாம் அருகே ஃபெந்தோம் ஆற்றுப் படுக்கைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மீனவர்களில் ஒருவருடையது என நம்பப்படும் மற்றொரு ஆடவரின் சடலமானது, பேராக் மாநிலம் ஹூத்தான் மெலிந்தாங் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 4.26 மணியளவில் உள்ளூர் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மிதந்த ஆணின் உடலைக் கண்டறிந்து, மலேசிய கடல்சார் அமலாக்க முகமைக்கு தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கேஎம் நூசா கப்பலானது சம்பவ இடத்துக்கு விரைந்தது.
அச்சடலமானது சிலாங்கூர் - பேராக் கடல் எல்லையில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மீட்கப்பட்ட முதல் நபரான முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மானின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கடல் மைல் தொலைவில் இந்த உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








