கோலாலம்பூர், டிசம்பர்.19-
கடந்த 2018 ஆம் ஆண்டு தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்காக போலீசார் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சித்தி காசீம் இன்று வெற்றிப் பெற்றுள்ளார்.
சித்தி காசீம் மற்றும் அவரின் சகாவான அனிஸ் ஆகியோருக்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 375 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி போலீஸ் துறை மற்றும் அரசாங்கத்திற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சித்தி காசிம் மற்றும் அவரின் சகா அனிஸ் ஆகியோருக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோதச் சோதனை மற்றும் சிறைவாசம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் அர்ஸியா அபாண்டி உத்தரவிட்டார்.
இதில் சித்தி காசீமிற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 625 ரிங்கிட் பொதுவான இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று அர்ஸியா அபாண்டி ஆணை பிறப்பித்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி சித்தி காசீமின் வீட்டில் போலீசார் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, அதே ஆண்டில் ஜூன் 23 ஆம் தேதி, அவர் தனது வழக்கறிஞர் பணியைச் செய்து கொண்டிருந்தபோது எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி அவரைச் சட்டவிரோதமாகக் கைது செய்தனர் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய இந்தச் சோதனையானது ஒருவரின் தனிப்பட்ட வீட்டிற்குள் மற்றும் பணியிடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஒப்பாகும் என்று நீதிபதி அர்ஸியா அபாண்டி வர்ணித்தார்.
போலீசாரின் இத்தகைய அத்துமீறிய செயலானது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அலட்சியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று அர்ஸியா அபாண்டி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு JAWI எனப்படும் கூட்டரசுப் பிரதேச சமய இலாகா அதிகாரிகளால் நடத்தப்பட்ட மற்றொரு சட்டவிரோதக் கைது விவகாரத்திலும் சித்தி காசீம், ஏற்கனவே இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டைப் பெற்று, வழக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








