கோலாலம்பூர், மார்ச்.14-
மேற்காசிய போர் காரணமாக, பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்குவதாகக் கூறப்படும் தகவலை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஜோகூர் மாநில இலாகா மறுத்துள்ளது.
அத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சந்தையில் போதுமான அளவில் இருப்பதாகவும் அதன் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பொருட்களின் விநியோகமானது, ஹரி ராயா பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் போதுமானதாக இருக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து நிலைகளிலும் பொருட்களின் விநியோகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இன்று சனிக்கிழமை ஜோகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் லிலிஸ் சஸ்லிண்டா தெரிவித்துள்ளார்.








