கோலாலம்பூர், மார்ச்.14-
பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிக்கி, தற்போது தாய்லாந்திற்குத் தப்பியோடி விட்டதாக நம்பப்படும் ஸம்ரி வினோத் மற்றும் தமிம் டாஹ்ரி ஆகிய இருவரும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாமல் உடனடியாக மலேசியா திரும்பி போலீஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சுங்கை பூலோவில் இன்று நடைபெற்ற 'Ziarah MADANI' நோன்புப் பெருநாள் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இனம், மதம் மற்றும் மன்னராட்சி (3R) தொடர்பான விவகாரங்களைக் கையில் எடுக்கும் எவருக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
அவர்கள் சீனரோ, மலாய்க்காரரோ அல்லது இந்தியரோ, எவராக இருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தால், அவர்கள் மீது சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.
மேலும், தவறு செய்யாதவர்கள் ஏன் மறைந்து வாழ வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பிய ரமணன், இருவரும் மலேசியாவிற்குத் திரும்பி போலீஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதற்கு முன்பு, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, துணிச்சலுடன் பொதுவெளியில் உரையாற்றி, குழப்பத்தை விளைவித்த அவர்கள், தற்போது சட்டத்திற்கு அஞ்சி ஓடி ஒளியாமல், துணிச்சலுடன் நாடு திரும்ப வேண்டும் என்றும் ரமணன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஸம்ரி வினோத் மற்றும் தமிம் டாஹ்ரி ஆகியோர் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வருவதையும், அவர்கள் தாய்லாந்திற்குத் தப்பியோடியதையும் மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் உறுதிப்படுத்தியிருந்தார்.
அவர்களைக் கண்டறிய தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ள மலேசியக் போலீசார், தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஸம்ரி வினோத் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தலைநகரில் ஆற்றிய உரை தொடர்பான விசாரணை அறிக்கை ஏற்கனவே சட்டத்துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், லங்காவியில் உள்ள ஆலயம் ஒன்றில், இந்து மதத்தின் புனிதச் சின்னமான 'சூலத்தை' சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், தமிம் டாஹ்ரி மீது, தண்டனைச் சட்டம், 295-வது பிரிவின் கீழ், வழக்குப் பதிவு செய்ய, கெடா மாநில அரசுத் தரப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இருவரும் மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டவுடன், அவர்கள் மீதான நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








