Jun 16, 2026
Thisaigal NewsYouTube
சபாவிற்கான இடைக்கால சிறப்பு மானியத்தை 1.5 பில்லியனாக உயர்த்திய அன்வார் / 40 விழுக்காடு வருமான உரிமை வழங்குவதிலும் கூட்டரசு அரசாங்கம் உறுதி
தற்போதைய செய்திகள்

சபாவிற்கான இடைக்கால சிறப்பு மானியத்தை 1.5 பில்லியனாக உயர்த்திய அன்வார் / 40 விழுக்காடு வருமான உரிமை வழங்குவதிலும் கூட்டரசு அரசாங்கம் உறுதி

Share:

சபாவுக்கான இடைக்கால சிறப்பு மானிய ஒதுக்கீட்டை 600 மில்லியனில் இருந்து 1.5 பில்லியனாக உயர்த்துவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்துள்ளார்.

பெனாம்பாங் உள்ள கடசான்துசுன் கலாச்சார சங்கத்தின் 2026-ஆம் ஆண்டு, சபா காமத்தான் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சபாவிற்கான 40 விழுக்காடு வருவாய் உரிமை தொடர்பில் இறுதி தீர்வு கிடைக்கும் வரையில், இந்த இடைக்கால நிதி ஒதுக்கீடு தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், மலேசிய உடன்படிக்கை 1963-இன் கீழ் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு வருவாய் உரிமையை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தற்போது அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் இறுதிக்கட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருவதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளையில், இந்த செயல்முறையை தாமதப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், மாறாக, ஒவ்வொரு முடிவும் பொறுப்புடனும் கவனமாகவும் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் வருவாயில் 40 விழுக்காடு பங்கினை சபா மாநிலத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோத்தா கினபாலு உயர்நீதிமன்ற உத்தரவை, தற்காலிகமாக நிறுத்தக் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனுவை, கடந்த ஏப்ரல் மாதம், அப்பீல் நீதிமன்றம் அனுமதித்தது.

இதனையடுத்து, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் அந்த உத்தரவின் அமலாக்கமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 40 விழுக்காடு வருவாய் உரிமை தொடர்பில் பிரதமர் அன்வாரின் இந்த வெளிப்படையான அங்கீகாரம், மாநில அரசின் மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக, கபங்கான் ராக்யாட் சபா அமைப்பின் பொதுச்செயலாளர் அர்மிசான் முகமது அலி பாராட்டியுள்ளார்.

Related News