Jun 16, 2026
Thisaigal NewsYouTube
விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சி -  ஜூன் 1 முதல் ஒப்ஸ் கேசான் 6.0 சிறப்பு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சி - ஜூன் 1 முதல் ஒப்ஸ் கேசான் 6.0 சிறப்பு நடவடிக்கை

Share:

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோக நெருக்கடியால் ஏற்படும் விலை உயர்வை கட்டுப்படுத்த, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு வரும் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 'ஓப்ஸ் கெசான் 6.0’ என்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

வியாபாரிகள் அளவுக்கு அதிகமாக பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரமும் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் அஸ்மான் ஆதாம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மூலப்பொருட்கள், செயல்பாட்டு செலவுகள் மற்றும் வணிகச் செலவுகள் அதிகரிப்பதை காரணம் காட்டி அதிக லாபம் ஈட்டும் முயற்சிகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கம் படிப்படியாக நாட்டிற்குள் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, விலை உயர்வுகளை முன்கூட்டியே கட்டுப்படுத்த அரசாங்கம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

விநியோகச் சங்கிலி, போக்குவரத்து செலவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களும் இந்த நடவடிக்கையின் கீழ் ஆய்வு செய்யப்படும்.

நியாயமற்ற முறையில், அதிக லாபம் ஈட்ட முயற்சிக்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

Related News