கோலாலம்பூர், அக்டோபர்.06-
வரும் அக்டோபர் 8 ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமன், வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், அந்த விசாரணை இன்னும் முடியவடையவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை சில நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக அரச மலேசிய போலீஸ் படைக்கு முக்கியமான ஆதாரங்களைப் பன்னீர் செல்வம் வழங்கியிருப்பதாலும், வரும் புதன்கிழமை அதிகாலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுமாறும் அந்த அமைப்புகள், அமைச்சர் சைஃபுடினைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் குழுவுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திய புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்பால் சிங், பன்னீர் செல்வம் தொடர்ந்து விசாரணைக்கு உதவ முடியும் என்பதால் அவருக்கு எதிராக தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்குமாறு உள்துறை அமைச்சர் என்ற முறையில் சைஃபுடின், சிங்கப்பூர் அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சிங்கப்பூர் சாங்கி சிறைச் சாலையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரிகள், பன்னீர் செல்வத்தை சுமார் மூன்று மணி நேரம் பேட்டி கண்டனர்.
அந்தப் பேட்டியின் போது, பன்னீர் செல்வத்திற்கு மலேசியாவில் இருந்து போதைப் பொருளை வழங்கிய நபர்களின் பெயர்களை உள்ளடக்கிய முக்கியத் தகவலை வழங்கியுள்ளார்.
அது தொடர்பாக அரச மலேசிய போலீஸ் படை தற்போது தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணை முடியும் வரையில், உண்மையான கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்யப்படும் வரை பேரா, ஈப்போவை சேர்ந்த 38 வயது பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை சிங்கப்பூர் ஒத்திவைக்க வேண்டும் என்று சைஃபுடின் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஒரு வழக்கறிஞரான ராம் கார்ப்பால் கேட்டுக் கொண்டார்.








