கோலாலம்பூர், டிசம்பர்.03-
நாடாளுமன்ற மேலவையில் இன்று புதன்கிழமை, மூன்று ஆண்டுகளுக்கான செனட்டர் பதவியின் முதலாவது தவணையை நிறைவு செய்த மூன்று அமைச்சர்கள், இரண்டாவது தவணையாக செனட்டர்களாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் ஆகிய மூவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் அவாங் பிமீ அவாங் அலி பாசா Awang முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தவணையாகச் செனட்டர்களாக நியமிக்கப்பட்ட அவர்களின் பதவிக் காலம் நேற்று டிசம்பர் 2-ஆம் தேதியோடு நிறைவு பெற்றது.
இதற்கிடையில், அமைச்சரவையில் 4 பதவிகள் காலியாக உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மூன்று அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுள்ளனர்.
பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் கடந்த மே மாதம் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த மாதம் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் எவோன் பெனடிக் ராஜினாமா செய்தார்.
அதே வேளையில், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸின் பதவிக் காலமும் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி நிறைவுக்கு வந்ததையடுத்து, தற்போது அமைச்சரவையில் நான்கு பதவிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.








