கோலாலம்பூர், டிசம்பர்.03-
சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போலீஸ் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அம்ரியின் மனைவி தாக்கல் செய்த வழக்கின் விளக்கமான எழுத்துப்பூர்வத் தீர்ப்பில், இந்த வழக்கு விசாரணைகள் குறித்து போலீசும், அரசாங்கமும் எந்த ஒரு பதிலும் தரவில்லை என்று நீதிபதி சு தியாங் ஜூ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான அரசு, அம்ரி மற்றும் காணாமல் போன மற்றொரு நபரான பாதிரியார் ரேமண்ட் கோ தொடர்பாக, மனித உரிமை ஆணையமான சுஹாகாம் கண்டறிந்தவைகளை ஆராய பணிக்குழு ஒன்றை நியமித்ததாகவும், அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில், அப்பணிக் குழுவானது அரசாங்க இரகசியம் என்று கூறி தாங்கள் தயாரித்த அறிக்கையை பொதுவில் வெளியிடவில்லை.
கடந்த 2020-ஆம் ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதி, அந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரையில், செயல்பாட்டில் இருந்த அந்த பணிக்குழுவானது, அதன் பின்னர் ஜூலை 9-ஆம் தேதி, வழக்கு விசாரணை நிறைவடைந்த பிறகு, எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் விசாரணை அதிகாரி கோர் யி ஷுஎனின் திறனின்மையைச் சுட்டிக் காட்டிய பணிக்குழு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தும் கூட, கடந்த 2021-ஆம் ஆண்டு அவர் உதவி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார் என்றும் கடந்த வாரம் நீதிபதி தனது எழுத்துப்பூர்வத் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.








