நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உதவும் வகையில், மரபணுப் பரிசோதனை நிபுணர்களை அனுப்ப மலேசியா திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதியை நேபாள அரசிடம் கோரியுள்ள மலேசியா அதன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மரபணு மாதிரிகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீட்கப்படும் உடல்களிலிருந்து பெறப்படும் மரபணு மாதிரிகளுடன் இவற்றை ஒப்பிட்டு, உயிரிழந்த மலேசியர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படும் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போதிய வசதிகள் இல்லாததால் மீட்கப்பட்ட சில உடல்கள் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் மரபணு அடையாளம் காணும் செயல்முறை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளுக்கு உதவ மலேசியாவின் ஸ்மார்ட் மாஸ் 01 குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளது.
11 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட இக்குழு, 12.4 டன் எடையிலான மீட்பு உபகரணங்கள், கண்டறியும் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், உயர் திறன் கொண்ட ட்ரோன்கள் மற்றும் சுரங்கப்பாதை மீட்பு உபகரணங்களுடன் காத்மாண்டு நகரை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








