Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாமில் கும்பல்களுக்கிடையே மோதல் சம்பவங்கள்: 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாமில் கும்பல்களுக்கிடையே மோதல் சம்பவங்கள்: 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

ஷா ஆலாம் பகுதியில் கடந்த மாதம் நடந்த இரு வெவ்வேறு கும்பல் மோதல் சம்பவங்கள் தொடர்பாக 23 முதல் 46 வயதுக்குட்பட்ட 10 பேரை சிலாங்கூர் மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் அலாம் மெகா பகுதியில் நடந்த மோதலில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலாம் மெகா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதியும், தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் நடந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு 10 பேரும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தாமான் ஸ்ரீ மூடா சம்பவத்தில், இருவர் பாராங் கத்திகளைப் பயன்படுத்தி தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக ஆகஸ்ட் 14 முதல் 28-ஆம் தேதி வரை ஷா ஆலாம், கிள்ளான், மூவார் மற்றும் ஜோகூரில் உள்ள இஸ்கண்டார் புத்ரி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 23 முதல் 46 வயதுக்குட்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குப் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த இரு சம்பவங்களுக்கும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தையும் போலீசார் நிராகரிக்கவில்லை.

இந்நிலையில், ஆலாம் மெகா வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழும், தாமான் ஸ்ரீ மூடா வழக்கு பிரிவு 148-ன் கீழும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News