கிளந்தான்–பேராக் எல்லையிலுள்ள வனப் பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்ற போது மாயமான நான்கு குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஆறு பேரும் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையேற்றக் குழுவில் இருந்த ஒரு மலை வழிகாட்டியுடன் போலீசார் தொடர்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது.
தற்போது அவர்களை மீட்கும் நடவடிக்கை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ (Pos Dakoh) வழியாக வனப் பகுதிக்குள் சென்ற அவர்கள், செப்டம்பர் 3-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் உள்ள போஸ் கெமார் (Pos Kemar) வழியாக வெளியேற திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி அவர்கள் திரும்பாததால், அவர்களது உறவினர்கள் நேற்று சிலாங்கூரில் போலீஸ் புகார் அளித்தனர்.
இதனையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.








