Sep 7, 2026
Thisaigal NewsYouTube
26,000-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரி மாணவர்களுக்கு 1,500 ரிங்கிட் பிடிபிடிஎன் முன்பணம்
தற்போதைய செய்திகள்

26,000-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரி மாணவர்களுக்கு 1,500 ரிங்கிட் பிடிபிடிஎன் முன்பணம்

Share:

2026 செப்டம்பர் கல்வியாண்டில் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் இளங்கலைப் படிப்பில் சேரும் தகுதியான புதிய மாணவர்களுக்கு, தேசிய உயர்கல்விக் கடன் நிதிக் கழகமான பிடிபிடிஎன் தலா 1,500 ரிங்கிட் கல்விக் கடனை முன்பணமாக வழங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 39.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 26 ஆயிரத்து 457 மாணவர்கள் பயனடைகின்றனர்.

அரசுப் பல்கலைக்கழகம் அல்லது பாலிடெக்னிக்கில் சேர யுபியுஆன்லைன் (UPUOnline) அல்லது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்த மலேசியக் குடிமக்கள் இதற்கு தகுதி பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா எனப்படும் STR உதவியைப் பெறுபவர்களாகவும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

கடந்த 1999-ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மாணவர்கள் தங்களது டபள்யுபிபி (WPP) சலுகையை மைபிடிபிஎன் (myPTPTN) செயலி மூலம் சரிபார்த்து, செப்டம்பர் 4 முதல் நவம்பர் 3 வரை நாடு முழுவதும் உள்ள பேங்க் இஸ்லாம் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக WPP சலுகைக் கடிதம் மற்றும் மைகாட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மூன்றாம் நபர் மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ள அனுமதி இல்லை என்றும் பிடிபிடிஎன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related News