உலு சிலாங்கூர், ஜனவரி.22-
பத்தாங் காலி–கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலையில் இன்று காலையில் பணிக்குச் சென்ற ஒரு பெண்ணின் மோட்டார் சைக்கிள், சாலையில் சுற்றித் திரிந்த குதிரை மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.
காலை 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், துப்புரவு மேற்பார்வையாளராகப் பணியாற்றும் 47 வயதுடைய அந்தப் பெண், சாலையின் வளைவு ஒன்றில் குதிரை மீது மோதியதில் இரு கால்களிலும் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து காலை 9.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் பத்தாங் காலியிலிருந்து கெந்திங் ஹைலண்ட்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது தெரிய வந்தது. அந்தச் சாலையின் ஒரு வளைவில் ஒரு குதிரைக் கூட்டம் நின்று கொண்டிருந்ததாகவும், எதிர்பாராதவிதமாக அவர் ஒரு குதிரை மீது மோதி கீழே விழுந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த அந்தப் பெண் சிகிச்சைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதனை அங்கிருந்த பொதுமக்கள் புதைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் துறைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








