Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

Share:

பூச்சோங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் படிக்கட்டு இடைவெளியில், சிலை வைத்து ஆலய சன்னதி போல் அமைத்திருந்த குடியிருப்பாளரை, அதனை உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த சிலையானது அவசரகால வெளியேற்றப் பாதைகளை மறைத்து குடியிருப்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக மலேசிய இந்து சங்கத்தின் உதவித் தலைவர் ஆர். எஸ். மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

அச்சிலையை அண்டை வீட்டுக் காரர்கள் யாராவது அகற்றினாலோ அல்லது சேதப்படுத்தினாலோ தேவையற்ற மோதல்கள் உருவாகக் காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிற்கு உள்ளே சிலை வைத்து வழிபடுவதில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவர்களுக்கு இடையூறாக பொதுவில் அவ்வாறு சிலை அமைப்பது சரியல்ல என்றும் அவர் விவரித்துள்ளார்.

அதேவேளையில், படிக்கட்டுகளைப் பயன்படுத்துவோர் அங்கு புகைபிடிக்கவும், எச்சில் துப்பவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மோகன் ஷான், அச்சிலையை உடனடியாக அகற்ற இந்து சங்கம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பானது அதன் மேலாண்மைக் குழுவால் நிர்வகிக்கப்படுவதால், நகராட்சி மன்றத்திற்கு அந்த சிலை அமைப்பு பற்றித் தெரியாது என்று சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் 16-வது மண்டல கவுன்சிலர் லீ ஜென் உயின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற நகராட்சி மன்றமானது அக்குடியிருப்பின் மேலாண்மைக் குழுவைத் தொடர்பு கொள்ளும் என்று அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆலய விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் இப்புகைப்படங்கள் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது.

Related News