கோலாலம்பூர் ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள பெவிலியன் எம்பசி ஆடம்பர குடியிருப்பில் நடந்த ஆயுத கொள்ளை தொடர்பாக, 12 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த கொள்ளையில் சுமார் 2.91 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்துள்ளார்.
குடியிருப்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதால், உள்நபர் உதவி அல்லது கூட்டுச் சதி நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணியளவில், புகார்தாரர் உட்பட 9 பேர் இருந்த அவ்வீட்டில், முகமூடியுடன் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அவர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 28 வயதுடைய சீன நாட்டவரின் செல்போனை சேதப்படுத்தியதுடன், அவரது கடப்பிதழையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








