Sep 10, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்
தற்போதைய செய்திகள்

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

Share:

மலேசிய இந்திய சமூகத்தின் மனிதவள மேம்பாடு, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக, ஆன்மிக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மொத்தம் 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 7 புதிய திட்டங்களை மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் சுமார் 600 நிறுவனங்கள் பயனடைவார்கள் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமாக, உயர்வு மடானி 2.0 தொழில்முனைவோர் திட்டத்துக்கு கூடுதலாக 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம், மொத்த நிதி 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 1,400 B40 மற்றும் M40 தொழில்முனைவோருக்கு உதவி வழங்கப்பட உள்ளதாக கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரமணன் தெரிவித்தார்.

மேலும், தமிழ்க் கல்வியை மேம்படுத்தும் வகையில், எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான தமிழ்மொழி மேம்பாட்டுத் திட்டத்துக்கு 9 லட்சத்து 680 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,690 மாணவர்கள் சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் கூடுதல் வகுப்புகளின் மூலம் பயனடைவார்கள் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

அதேவேளையில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக மடானி கருவித் திட்டத்தின் கீழ் 13.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, முதல் ஆண்டு படிக்கும் 5,000 B40 மற்றும் M40 மாணவர்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், 5,000 B40 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் வீதம் ஒருமுறை கல்வி உதவி வழங்க 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்ப்பள்ளிகளுக்கான கருவி முன்னெடுப்பானது தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. 5.36 மில்லியன் ரிங்கிட் செலவில் 358 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 ஸ்மார்ட் போர்ட்டுகள் வழங்கப்பட உள்ளன.

அதேவேளை, மடானி ஹார்மோனி திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, நாடு முழுவதும் 250 குர்ட்வாரா மற்றும் இந்திய தேவாலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட உள்ளது. இவை கற்றல் மையங்கள் மற்றும் சமூக, ஆன்மிக நடவடிக்கைகளுக்கான இடங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.

மேலும், மலாக்கா மாநிலத்தில் 700 தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க குற்றத் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே, உயர்வு மடானி திட்டம் 2-ன் கீழ் 24 வகையான தொழில்களில் ஈடுபடும் 10 மாநிலங்களைச் சேர்ந்த 159 தொழில்முனைவோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் தொடரில் உதவி பெற்ற 126 பேரையும் சேர்த்து, மொத்தம் 285 தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

உயர்கல்வி தொடர்பான திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரையும், தொழில்முனைவோர் மற்றும் ஆன்மிகத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரையும் திறக்கப்படும் என அமைச்சர் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப... | Thisaigal News