ஆசியாவில் மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா இருப்பதால், பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் பங்கேற்பதன் மூலம் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய சந்தைகளுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த மலேசியா முயற்சி செய்து வருகின்றது.
இந்தியாவுக்கான மலேசிய தூதரககத்தின் பொறுப்பு அதிகாரியும், துணை உயர் ஆணையருமான ஷாரிஃபா எஸ்நீடா வாஃபா வெளியிட்டுள்ள தகவலில், 2025ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு மதிப்பு 5.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மலேசிய நிறுவனங்களான கெந்தாரி, யுஎம்டபள்யு குருப் மற்றும் செல்கொன் உள்ளிட்டவை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டில், ஜூன் மாதம் வரையில் மலேசியாவில் இந்திய நிறுவனங்களின் 293 உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஷாரிஃபா எஸ்நீடா தெரிவித்துள்ளார்.
அவற்றின் மொத்த மதிப்பு 2.95 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், இத்திட்டங்கள் மூலம் 28 ஆயிரத்து 455 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து, இலக்கமுறை பொருளாதாரம், பாதுகாப்பு, உயர்கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழிலாளர் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளிலும் இந்தியா–மலேசியா ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரிக்ஸ் அமைப்பில் மலேசியாவின் பங்கேற்பு, இந்தியா உள்ளிட்ட முக்கிய வளர்ந்து வரும் சந்தைகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் விரிவுபடுத்த உதவும் என்றும் ஷாரிஃபா எஸ்நீடா குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் இலக்கமுறை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் பிரிக்ஸ் தளம் வாய்ப்பளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








