லிண்டுங் 24 மணி நேரத் திட்டத்தில் இருந்து விலகுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 87.6% தொழிலாளர்கள் அல்லது 85 லட்சம் பேர் தொடர்ந்து திட்டத்தில் இடம்பெறத் தேர்வு செய்துள்ளதாக சமூகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வேலை நேரத்திற்கு வெளியேயும் விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், கூடுதல் சமூகப் பாதுகாப்பின் அவசியத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் உணர்ந்திருப்பதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக சமூகப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அசிஸ் முகமட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, இத்திட்டத்தின் கீழ் 6,330 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 69 கோரிக்கைகள் பெறப்பட்ட நிலையில், 9.97 மில்லியன் ரிங்கிட் நலத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் இருந்து விலகிய 12.4% தொழிலாளர்களில் 52% பேர் 3,500 ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திட்டத்தின் பயன்கள் குறித்து தொழிலாளர்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இருந்து விலகிய தொழிலாளர்கள் விரும்பினால் மீண்டும் இதில் இணையலாம் என்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
லிண்டுங் 24 மணி நேரத் திட்டத்தின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தில் 0.75 விழுக்காடு பங்களிப்பு செலுத்த வேண்டும். வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கும் இத்திட்டம் பாதுகாப்பு வழங்குகிறது.








