Nov 10, 2026
Thisaigal NewsYouTube

இன்று முதல் வீட்டுக் காவலில் நஜிப் - புதிய உத்தரவைப் பிறப்பித்தது உயர்நீதிமன்றம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இன்று முதல் வீட்டுக் காவலில் நஜிப் - புதிய உத்தரவைப் பிறப்பித்தது உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் அப்துல் ரஸாக், தனது முதல் ஊழல் வழக்கில் எஞ்சியுள்ள சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் புதிய உத்தரவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட பின்னர், நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனுடின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், கடந்த நவம்பர் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை ரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

அதேவேளையில் இன்றைய விசாரணையில், நஜிப் தனது மகள் நஜ்வாவுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில், தமக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்திவிட்டதாக நஜிப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, எஞ்சிய இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்கத் தயாரானார்.

என்றாலும், கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவில் தெளிவின்மை இருப்பதாகக் கூறி, காஜாங் சிறையிலிருந்து அவரை விடுவிப்பதை சட்டத்துறைத் தலைமை அலுவலகமான ஏஜிசி தாமதப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின் படி, இன்று முதல் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நஜிப் வீட்டுக் காவலில் எஞ்சிய தண்டனையை அனுபவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →