Oct 16, 2026
Thisaigal NewsYouTube

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதி உதவி கோருவதை கட்டுப்படுத்துவதா? மஹிமா கண்டனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதி உதவி கோருவதை கட்டுப்படுத்துவதா? மஹிமா கண்டனம்

கோலாலம்பூர், நவ. 27-


முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அது தொடர்பான வழிக்காட்டுதல் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்து இருக்கும் KPKT எனப்படும் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் நடவடிக்கைக்கு மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புதிய விதிமுறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் KPKT துணை அமைச்சர் டத்தோ அயிமான் அதிரா சாபு அளித்துள்ள விளக்கம், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தினரை அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

ஒரு வழிபாட்டுத்தலத்திற்கு ஒரு முறை, நிதி வழங்கப்படுமானால், அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு நிதி கேட்டு, புதிய விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பிக்க முடியாது. அவர்களின் அத்தகைய விண்ணப்பங்கள் மூன்று ஆண்டுகளுக்கு e-RIBI முறை வாயிலாக தடுக்கப்படும் என்று KPKT துணை அமைச்சர் டத்தோ அயிமான் அதிரா சாபு அறிவித்துள்ளார்.

அண்மையில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான 1,074 விண்ணப்பங்களில் 422 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 46.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் கூறுகிறார்.

KPKT முன்மொழிந்த இந்த திட்டம், விசித்திரமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வு மற்றும் நாட்டில் நிச்சயமற்ற பொருளாதார சூழலின் மத்தியில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிதி வழங்குவது அல்லது ஒதுக்குவது என்பது இப்போதைக்கு பொருந்தாத விஷயமமாகும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லத்தை நிர்வகிப்பதற்கு நிறைய நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

வழிபாட்டுத் தலங்களின் செலவு என்பது நிர்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு மட்டும் செலவழிக்கப்படுவதில்லை. மாறாக கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் சமய சிறப்பு வழிபாடுகள், ஆலய திருவிழா மற்றும் சமயம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான செலவைகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

தற்போது மடானி அரசாங்கத்தின் பரிந்துரையுடன், வழிபாட்டுத்தலங்கள் சமூக மையங்களாக செயல்படத் தொடங்கி, மக்களின் வளப்பம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு என அனைத்து தரப்பினருக்கும் இலவச உணவு வழங்கக்கூடிய ஆலயங்களும் பல உண்டு என்பதை KPKT அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

இத்தனை செலவுகளுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கும்? என்று என்று டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் ஒரு கொள்கையைத் தொடங்கி நடப்பு நிலைமையை ஆராய்வதற்குப் பதிலாக சமூகத்தின் விருப்பங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி கேட்டு விண்ணப்பிக்கின்ற ஆலய நிர்வாகங்களின் விண்ணப்பங்கள் மூன்று ஆண்டுகளுக்கு e-RIBI முறை வாயிலாக தடுக்கப்படும் என்றால் ஆலயங்களில் அவசர தேவைகளுக்கு குறிப்பாக பழுதுப்பார்க்கும் பணிகள் அல்லது சேதங்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பிரச்னைகளை KPKT கருத்தில் கொள்ளாதது ஏன் என்று டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

மடானி அரசாங்கம், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்களின் பக்தர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும் அநீதிக்கான உணர்வை உருவாக்காமல், அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் நியாயமாகப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும், / ஏற்றுக்கொள்ள வேண்டும் . அதுதான் நாட்டின் நல்வாழ்வுக்கும் வசதிக்கும் உத்தரவாதமாக இருக்க முடியும் என்று மஹிமா தலைவரான டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →