சிலாங்கூர், காஜாங் அருகே நேற்று இரவு போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் உள்ளூரைச் சேர்ந்த இரு கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ எம். குமார் முத்துவேலு தெரிவித்தார்.
நேற்று இரவு 9:10 மணியளவில், புக்கிட் அமான் 'டி9' பிரிவினர் தீவிரக் குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாங்கி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய புரோட்டான் வீரா காரை நிறுத்த முற்பட்டனர். ஆனால், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்ற சந்தேக நபர்கள், போலீஸ் வாகனத்தின் மீது மோதிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தற்காப்பிற்காக போலீசார் திருப்பி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காரில் இருந்த 25 மற்றும் 46 வயதுடைய இரு கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், .38 ரக ரிவோல்வர் துப்பாக்கி ஒன்று, 6 தோட்டாக்கள், 4 வீச்சரிவாள்கள், பூட்டுடைக்கும் கருவிகள் மற்றும் மாற்று வாகன எண்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று இன்று காஜாங் போலீஸ் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனை தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இருவரும் ஆயுதமேந்திய கொள்ளை, வீடுபுகுந்து திருடுதல் உட்பட சுமார் 30 முந்தைய குற்றப்பின்னணிகளைக் கொண்ட தீவிரக் கொள்ளையர்கள் ஆவர். இவர்கள் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளைக் குறிவைத்து, முகமூடி அணிந்து, ஆக்ரோஷமாக கொள்ளையடிப்பதையே தங்களின் பாணியாகக் கொண்டிருந்தனர். இன்னும் தலைமறைவாக உள்ள இக்கும்பலைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.














