உலக அளவில் வலிமையான கடப்பிதழ் வரிசையில் மலேசியா 11 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகம் முழுவதும் 227 பயண வழித்தடங்களில் விசா இல்லாமல் 180 இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கும் கடப்பிதழ் என்ற முறையில் 11 ஆவது இடத்தை மலேசியா பிடித்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா இரண்டு படிநிலை உயர்ந்துள்ளது.
மலேசிய கடப்பிதழை கொண்டு இருப்பவர்கள் கட்டார், ஐக்கிய அரசு சிற்றசு, இத்தாலி, யுனைடெட் கிங்டம், கனடா மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு விசாயின்றி நுழைய முடியும்.
உலகக் குடிமக்கள் மற்றும் வசிப்பிடத்திற்கான ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் தொகுத்துள்ள உலகளாவிய குறியீட்டில் இந்தக் கடப்பிதழ் தரவரிசை இடம்பெற்று உள்ளது. 2014 இல் மலேசியா 8 ஆவது இடத்தில் இருந்தது. அதற்கு பிறகு தொடர்ந்தாற் போல் வந்த ஆண்டுகளில் மலேசியாவின் நிலை சரிவு கண்டது. முதல் பத்து இடத்தை பிடிக்க தவறியது.
ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் ஆய்வின்படி உலக அளவில் வலிமையான கடப்பிதழ் வரிசையில் முதல் இடத்திற்கு சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. இதுநாள் வரையில் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. சிங்கப்பூர், விசா இல்லாமல் 192 இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கும் கடப்பிதழ் என்ற முறையில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
உலக நாடுகளின் 199 கடப்பிதழ்களையும் 227 பயண நகரங்களையும் ஒப்பிட்டு ஹென்லி கடப்பிதழ் குறியீடு வகுக்கப்படுகிறது. அனைத்துலக விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கணக்கீடு நடத்தப்படுகிறது.








