கோலாலம்பூர், டிசம்பர்.13-
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பண்டார் சன்வே காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது எஸ். மணிசேகரன் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய காவல் துறை தலைவர் (IGP) டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பதிவுச் செய்தார்.
கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக நிறைவு செய்யுமாறு சட்டத்துறைத் தலைவர் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், எஸ். மணிசேகரன் மனைவி எஸ். ராஜேஸ்வரி இது தொடர்பாக புகார் அளித்திருந்தாலும், இது நாள் வரை அவரை காவல் துறையினர் தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் ஏற்பட்டால், அது குறித்து வழக்கு தொடுக்கவோ, விசாரணை மேற்கொள்ளவோ சட்டத்தில் இடம் உள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக ஏற்பட்ட தாமதம் குறித்து காவல் துறை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும். மரணம் ஏற்பட்டு 9 மாதங்கள் ஆகி விட்டன. சட்டத்துறைத் தலைவர் உத்தரவிட்டபடி, காவல் துறை தனது விசாரணை அறிக்கையை உடனடியாகத் தயார் செய்து முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகைய வழக்குகளுக்குப் பொருந்தும் தற்போதைய நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் அவசியமாகும். இவ்வாறான சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்படும் அல்லது தகவல் கிடைக்கும் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கும் கட்டாய காலவரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அதோடு, இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஒழுங்குமுறை நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது விசாரணை தாமதமின்றி முன்னேறுவதற்காக அந்த அதிகாரிகளை மாற்றுவதாக இருக்கலாம் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தாமதமாக வழங்கப்படும் நீதி என்பது அநீதியாகும். அது விசாரணை, சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மீது நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என மூத்த வழக்கறிஞருமான கோபிந்த் கூறினார். போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 334 மற்றும் அத்தியாயம் XXXII ஆகியவற்றின் நோக்கத்திற்கு இது முரணானதாகத் தாம் கருதுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, சட்டத்துறை தலைவரின் உத்தரவுபடி காவல் துறை தலைவர் உடனடியாகச் செயல்பட வேண்டும். மேலும், இந்த வழக்கின் தகவல்கள் குறித்து எஸ். மணிசேகரனின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த மரண வழக்கு தொடர்பாக, தாம் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அவர்களிடமும் உடனடி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இத்தகைய வழக்குகளின் விசாரணை நடைமுறைகள் சீர்திருத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும்; சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதையும், இனி இது போன்ற தாமதங்கள் நிகழாதிருப்பதையும் உறுதிச் செய்ய வேண்டும் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.








