சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 மற்றும் வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டச் சட்டம் 2017 ஆகியவற்றிற்கான திருத்த மசோதாக்கள் வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
சட்டம் 789-இன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் 'பயணிகள் பாதுகாப்புத் திட்டத்தையும்', சட்டம் 800-இன் கீழ் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் 'மகப்பேறு விடுப்புக்குப் பிந்தைய உதவித்தொகை' திட்டத்தையும் உள்ளடக்கியிருக்கும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
எல்லை தாண்டி வேலைக்குச் சென்று வரும் மலேசியர்கள், குறிப்பாகத் தினமும் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் 400,000-க்கும் மேற்பட்ட மலேசியர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே சட்டம் 789-இன் திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
"டிசம்பர் மாத இறுதியில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று வரும் மலேசியர்களுக்குப் பயனளிக்கும் வகையிலான பயணிகள் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான சட்டம் 789-இன் திருத்தங்களைத் தாம் நேரடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாக டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கெசோ 2026-ஆம் ஆண்டிற்கான ஐ-லிண்டுங் ஊடக விருதுகள் - ஊடகவியலாளர்களுடனான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மனிதவளத் துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான், பெர்கெசோ வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால், பெர்கெசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அசிஸ் முகமது, தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைமை ஆசிரியர் டத்தோ அருள் ராஜூ துரைராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








