கோலாலம்பூர், மே.18-
செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதி காலியாக இருப்பினும், அப்பகுதி மக்கள் பெற்று வரும் சேவைகள் மற்றும் அரசாங்க உதவிகளானது எந்தவித பாதிப்பும் இன்றி தொடரும் என கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறையின் அமைச்சர் ஹன்னா இயோ உறுதி அளித்துள்ளார்.
அதே வேளையில், நேற்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, அவரது சேவைக்கு ஹன்னா இயோ தமது நன்றியும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதவிக் காலத்தில் கோலாலம்பூர் குடியிருப்பாளர்களின் நலனுக்காக செய்த பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என்றும் ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோலாலம்பூர் மாநகராட்சி மேயர் டத்தோ ஶ்ரீ மைமூனா முஹமட் ஷாரிஃபிடம், செத்தியாவங்சா பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.
இதில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, உள்ளூர் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹன்னா இயோ இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செத்தியாவங்சா பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்தின் செயல்பாட்டு நேரங்களில் நேரடியாக சென்று, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் உதவிகளை தொடர்ந்து பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், செத்தியாவங்சா பகுதியில் உள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான புக்கிட் டிண்டிங்கின் பாதுகாப்பைத் தொடர்ந்தும் உறுதிச் செய்ய, அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் ஹன்னா இயோ உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளின் மூலம் அந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டும் சமநிலையுடன் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.








