பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.14-
அதிர்ச்சித் தகவல் ஒன்று மலேசியாவின் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு, 100 ஆயிரம் டாலர்கள் கேட்டு, மர்ம நபர்கள் ஒரே மாதிரியான மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக, தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்றவர்களில், ஃபாமி ஃபாட்சீல், முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சேன், இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் அடாம் அட்லி, சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் தௌஃபிக் ஜொஹாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான நஞ்வான் ஹலிமி, ஃபாமி ங்கா, கூலிம் சட்டமன்ற வோங் சியா ஸென், செனட்டர் மனோலான் முகமட் உள்ளிட்டோர் அடங்குவர்.
மிரட்டல் மின்னஞ்சலில் ஒரு QR குறியீடு இருந்ததாகவும், இது ஒரு வகை ஊடுறுவல் முயற்சி என்றும் ரஃபிஸி ரம்லி கூறினார். இந்தச் சம்பவத்தை அரசாங்கம் தீவிரமாகக் கருதுவதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.








