ஜோகூர் பாரு, ஜனவரி.10-
ஜோகூர் - சிங்கப்பூர் தரைமார்க்க எல்லைச் சோதனைச் சாவடிகளில் இன்று சுமார் 10,000 வெளிநாட்டவர்கள் சிக்கித் தவிப்பதாகப் பரவிய செய்தியை ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு குழு ஆட்சிக் குழு உறுப்பினர் முஹமட் ஃபாஸ்லி முஹமட் சாலே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் மற்றும் சுல்தான் அபு பக்கர் வளாகம் ஆகிய இரண்டு நுழைவாயில்களிலும் பத்தாயிரம் பேர் வரை நெரிசலில் சிக்கியுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை காலங்களில் எல்லைகளில் வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், ஆனால் 'பரிதவிப்பு' அல்லது 'நெரிசலில் சிக்கித் தவிப்பு' என்று சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாக இல்லை என்றும் அவர் கூறினார்.
குடிவரவுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையைச் சீராகக் கையாண்டு வருவதாகவும், பயணிகள் நெரிசலைக் குறைக்க கூடுதல் முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எல்லைக் கடப்புகளில் நெரிசலைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.








