Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் வழக்கில் ஆவணங்களைத் திரட்டுவதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன்? அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் வழக்கில் ஆவணங்களைத் திரட்டுவதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன்? அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.20-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட எஸ்ஆர்சியின் 27 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணமாற்றம் குற்றச்சாட்டு வழக்கைத் தொடங்குவதற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன் என்பது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட், நிறுவனத்தின் ஊழலுடன் தொடர்புபடுத்தப்பட்ட இவ்வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களை அரசு தரப்பு வழங்கத் தவறியதால், கடந்த 6 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த ஒரு முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கு, கடைசியில் ஒன்றுமில்லாமல் பிசுபிசுத்துப் போனதைக் காண மக்கள் விரும்பவில்லை என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

எஸ்ஆர்சியின் 27 மில்லியன் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் நஜீப் கடந்த 2019 ஆம் ஆண்டில் நீதின்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். இவ்வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. இந்த 6 ஆண்டுகளில் வழக்கிற்குத் தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைத் திரட்ட முடியாமல் போனது ஏன் என்பது குறித்து தமக்குப் புரியவில்லை என்று பண்டான் எம்.பி.யான ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.

1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி ஊழல்களை இதற்கு முன்பு தாம் ஆய்வு செய்து அம்பலப்படுத்திய அனுபவத்திலிருந்து, எஸ்ஆர்சி தொடர்பான முறைகேடுகளில் பணப் புழக்கத்திற்கான ஆதாரங்கள் உள்ளன என்பது தெளிவாகத் தெரிய வந்தது என்று ரஃபிஸி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அப்படிப் போதுமான ஆதாரங்கள் இருந்தும், இந்த வழக்கு கைநழுவிப் போனது ஏன் என்பது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஃபிஸி ரம்லி கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, இன்று காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 27 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட எஸ் ஆர்சி இண்டர்நேஷனல் சட்டவிரோதப் பணமாற்றம் வழக்கில் நஜீப்பை விடுவித்தது.

2019 ஆம் ஆண்டு நஜீப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதிலிருந்து இந்த ஆறு ஆண்டுகளில், அரசு தரப்பு, வழக்கு தொடர்புடைய சாட்சி அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. நடப்பு சூழ்நிலையைப் பார்க்கும் போது அரசு தரப்பு வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கான ஆற்றலைக் கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே வழக்கிலிருந்து நஜீப்பைத் தற்காலிகமாக விடுவிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →