பேராக் மாநிலம் ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து, போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜிப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் அவசரப் படிக்கட்டுப் பகுதியில் முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதை பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் முன்னதாகக் கவனித்துள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து சென்ற போது, அந்த நபர் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக நஜிப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








