கோலாலம்பூரில் எம்.ஆர்.டி ரயில் பாதை மேம்பாலத்தில் இருந்து தொங்கிய கேபிளில் மோட்டார் சைக்கிள் மோதியதில், ஓட்டுநர் காயமடைந்ததுடன் சில வாகனங்களும் சேதமடைந்தன.
இன்று அதிகாலை ஸ்ரீ ராயா மற்றும் பண்டார் துன் ஹுசேன் ஓன் எம்.ஆர்.டி நிலையங்களுக்கு இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தொங்கியிருந்த கேபிள், கம்பி திருட்டு முயற்சியில் வெட்டப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.
கேபிளில் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, சில வாகனங்களின் உடற்பகுதி மற்றும் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
ரேபிட் கேஎல் தொழில்நுட்பக் குழுவினர் கேபிளை உடனடியாக அகற்றினர். எம்.ஆர்.டி கட்டமைப்பு மற்றும் ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும், காஜாங் வழித்தட ரயில் சேவை வழக்கம்போல் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








