கோலாலம்பூர், நவம்பர்.19-
மலேசியா – சீனா இடையிலான பாண்டா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு பாண்டா கரடிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தன.
Chen Xing மற்றும் Xiao Yue எனப் பெயர் கொண்ட அந்த பாண்டா கரடி ஜோடியானது அடுத்த 10 ஆண்டுகள் Zoo Negara-வில் வைத்துப் பராமரிக்கப்படவுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையில் உள்ள நட்பையும், நல்லிணக்கத்தையும் குறிக்கும் வகையில், இந்த பாண்டாக்கள் சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பாண்டா ஜோடியானது பராமரிப்பு மையத்தில் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, பொதுமக்களின் பார்வையாக அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.








