தீபாவளி விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில், ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு 20,000 ரிங்கிட் நிதியுதவியை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் வழங்கியுள்ளார்.
கெப்பாயாங் சட்டமன்ற உறுப்பினரும் ஜசெக. தேசியத் துணைத் தலைவருமான ஙா கோர் மிங், நேற்று ஈப்போ லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, அப்பகுதி வணிகர்கள் சங்கத்திடம் இந்த நிதியை வழங்கினார். தீபாவளிக் கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கும், வணிகச் சூழலைக் கவர்ச்சிகரமாகவும் பாதுகாப்பாகவும் மேம்படுத்துவதற்கும் இந்த உதவி துணைபுரியும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஈப்போ லிட்டில் இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையையும் அவர் திறந்து வைத்தார். மதானி அரசாங்கத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 12,000-ஆவது பொதுக் கழிப்பறை இதுவென்றும், பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மேம்பட்ட வசதிகளை வழங்குவதுடன், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் உதவும் என்றும் ஙா கோர் மிங் கூறினார்.

வணிகர்களுடனான இந்த சந்திப்பின் போது புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் மற்றும் இதர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.








