மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய 300 மியன்மார் நாட்டவர்கள் யாங்கூனில் உள்ள ராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து மியன்மார் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நபர்களின் நிலை குறித்து விசாரிக்க, மியன்மாரிலுள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரிக்கும் உத்தரவிடப்படும் என்று அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று, பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் சிக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் தர்மிஸி சுலைமான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ரோஹிங்யா மற்றும் ராக்கின் இனத்தவர்களும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 1,476 மியன்மார் நாட்டவர்கள், அந்நாட்டின் மூன்று கடற்படைக் கப்பல்கள் மூலம் ஏற்கெனவே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், நாடு திரும்ப விரும்புவதை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டதாகவும் முஹமட் கூறினார். நாடு திரும்புவோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மியன்மார் தலைமைத்துவம் ஏற்கெனவே உறுதியளித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மியன்மார் அதிபர் மின் அவுங் லாய்ங் மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம், அந்நாட்டு அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அல்ல என்றும், மலேசியாவைப் பாதிக்கும் அகதிகள் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே அதன் நோக்கம் என்றும் முஹமட் ஹசான் விளக்கினார்.








