மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மதத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒருபோதும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா வலியுறுத்தியுள்ளார்.
பத்துமலை திருத்தல மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘மலேசிய வழிபாட்டுத் தலங்களின் மேலாண்மை மற்றும் சட்ட அம்சங்கள்’ குறித்த கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டான்ஸ்ரீ நடராஜா இதனை தெரிவித்தார்.
இந்த நாட்டில் வாழும் இந்துக்களின் கலாசார மற்றும் ஆன்மீக அடையாளத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்வது நமது ஆலயங்களே. எனவே, ஆலயங்களின் புனிதத்தையும் அதன் நில உரிமைகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும்.
இந்து சமய விவகாரங்களிலோ அல்லது கோயில்கள் தொடர்பான பிரச்சனைகளிலோ தேவஸ்தானம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. எந்தவொரு சவாலையும் சட்ட ரீதியாகவும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
இந்து ஆலயங்களின் பொறுப்பாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் டத்தோ சிவகுமார் தலைமையிலான மஹிமா இயக்கம் இந்த கருத்தரங்கை நடத்துகிறது என்றால் அதற்கு பின்னால் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம் உள்ளது என்று பொருள். நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. அதேபோல் அனைத்து ஆலய பொறுப்பார்களும் அவர்களின் கடமைகளை செய்து கொண்டு இருக்கின்றனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
எனினும் ஆலயங்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் பார்க்காமல், அவற்றைச் சட்டப்பூர்வமாக எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நிர்வாகிகள் தெளிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் வரும் இடர்பாடுகளைத் தவிர்க்க முடியும்.
டத்தோஸ்ரீ என். சிவகுமார் தலைமையிலான 'மஹிமா' போன்ற அமைப்புகள் முன்னெடுக்கும் இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சிகள், நாடு தழுவிய அளவில் உள்ள இந்து ஆலயங்களைப் பலப்படுத்தும் ஒரு முக்கியக் கருவியாகும்.
இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் ஒரு பாதுகாப்புத் தளமாக இக்கருத்தரங்கு அமைந்திருப்பதாகப் பாராட்டிய அவர், அனைத்து ஆலய நிர்வாகிகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்தரங்களில் நாட்டில் உள்ள ஆ லயங்களின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.











