மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் மீதான ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு மேல்முறையீட்டுத் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் திடீரென ஒத்திவைத்ததற்கு மலேசிய சோசலிச கட்சியான பி.எஸ்.எம் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இன்று வழங்கப்படவிருந்த இத்தீர்ப்பு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவரான நீதிபதி சே ருசிமா கசாலி உடல்நலக் குறைவால் மருத்துவ விடுப்பில் சென்றதால், வரும் ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபு பக்கர் ஜைஸ் அறிவித்தார். தீர்ப்புக்கான எழுத்துப்பூர்வ அறிக்கை தயாராக உள்ள நிலையில் இந்த ஒத்திவைப்பு நிகழ்ந்துள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், "எழுத்துப்பூர்வ தீர்ப்பு தயாராக இருக்கும்போது, மற்ற நீதிபதிகள் அதனை வாசித்திருக்கலாம். இந்த ஒத்திவைப்பு தேவையற்றது. சையத் சாதிக்கிற்கு எதிரான இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று சாடியுள்ளார். கடந்த 2023-இல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சையத் சாதிக், 2025 ஜூன் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனை எதிர்த்து அரசுத் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டின் தீர்ப்பே தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








