சிலாங்கூர், காஜாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண், தலையில் வெட்டப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை நிறைவடைந்த பிரேதப் பரிசோதனையின்படி, அப்பெண்ணின் உடல் உறுப்புகள் சிதைக்கப்படாமல் முழுமையாகவே இருந்ததாக காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார். மேலும், சடலம் கண்டெடுக்கப்பட்ட அந்த வீடு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெளிநாட்டுத் தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தை அடுத்து, போலீசார் சோதனையிட்டபோது வரவேற்பறையில் இருந்த ஒரு சூட்கேஸிற்குள் அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லாததால், அவரது அடையாளம் மற்றும் இனம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்களைக் காணவில்லை எனத் தேடுபவர்கள் உடனடியாகப் போலீசாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








