40 முதல் 59 வயதிற்குட்பட்ட வர்த்தக மற்றும் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் நாளை முதல் 30 ரிங்கிட் மானியக் கட்டணத்தில் ஆரோக்கியப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
வழக்கமாக 80 ரிங்கிட் முதல் 100 ரிங்கிட் வரை செலவாகும் இப்பரிசோதனைக்கான மீதிக் கட்டணத்தை அரசாங்கமும் சொக்சோவும் ஏற்கும். பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கான தொழிற்கல்வி ஓட்டுநர் உரிமம் கொண்டுள்ள, சொக்சோவில் தீவிரமாகப் பங்களிக்கும் வர்த்தக ஓட்டுநர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இப்பரிசோதனையில் கண், காது, தூக்கக் குறைபாடு, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பரிசோதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. "ஓட்டுநர்களின் ஆரோக்கியக் குறைபாடு பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால், ஆரம்பக் கட்டத்திலேயே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் லோக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.








