கோலாலம்பூர், ஜனவரி.14-
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் நேற்று அதிகாலையில் தனது கணவருக்காகக் காரில் காத்திருந்த 22 வயது இளம்பெண் ஒருவரைத் தன்னை போலீஸ்காரர் என்று கூறிக் கொண்ட மர்ம நபர் தாக்கியதோடு அநாகரிகமான செயலிலும் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகே இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனது கணவர் உணவகத்திற்குச் சென்றிருந்த வேளையில், காரில் தனியாகக் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர், திடீரென காருக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுள்ளார்.
தன்னை ஒரு போலீஸ்காரர் என்று கூறிக் கொண்ட அந்த நபர், அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அவரது முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்தப் பெண் கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த வாங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் லாஇம் இஸ்மாயில், இப்புகாரை உறுதிப்படுத்தியுள்ளார். "சம்பந்தப்பட்ட அந்த ஆடவரைத் தாங்கள் தீவிரமாகத் தேடி வருவதாகவும், பொது இடங்களில் இது போன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








