Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கிரிப்தோ நாணய முதலீடு: பெண் மொழிப்பெயர்ப்பாளர் 572,130 ரிங்கிட்டை இழந்துள்ளார்
தற்போதைய செய்திகள்

கிரிப்தோ நாணய முதலீடு: பெண் மொழிப்பெயர்ப்பாளர் 572,130 ரிங்கிட்டை இழந்துள்ளார்

Share:

ஈப்போ, செப்டம்பர்.19-

கிரிப்தோ நாணய முதலீட்டுத் திட்டத்தில் பெண் மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் 5 லட்சத்து 72 ஆயிரத்து 130 ரிங்கிட்டை இழந்துள்ளதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நாசீர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தாம் பங்கேற்ற கிரிப்தோ நாணய முதலீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் 20 விழுக்காடு லாபத் தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதியை நம்பி 37 வயது மாது, அந்தமுதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான யாங் யூதிங் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வெளிநாட்டு ஆடவர் ஒருவர், மலேசிய ரிங்கிட்டில்ல 8 ஆயிரத்து 740 ரிங்கிட்டை முதலீடு செய்யும்படி அந்த மாதுவை அணுகியுள்ளார்.

தொடக்க முதலீட்டிலேயே 9,595 ரிங்கிட் லாபம் கிடைத்து இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்த அந்த மாது, தொடர்ந்து பெரிய தொகையை முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஓன்லைன் பரிமாற்றம் வாயிலாக 12 முறை, 9 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 130 ரிங்கிட்டை அந்த மாது பணத்தைப் பட்டுவாடா செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி நாசீர் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

பிரதிபலனாக எந்தவொரு லாபத் தொகையும் கிடைக்காத நிலையில், வங்கியில் கடன் பெற்று முதலீடு செய்யுமாறு சந்தேக நபர், நிர்பந்தப்படுத்தியதைத் தொடர்ந்து உஷரான அந்த மாது, முதலீட்டுப் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.

அதன் பிறகு அந்த நபர் தொடர்பில் இல்லாததை அறிந்த மாது, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, போலீசில் புகார் செய்து இருப்பதாக ஏசிபி நாசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News