பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதர்கள் இழைத்து வரும் அடக்கு முறையை கண்டித்து, மனிதாபிமான உணர்வுடன் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு நல்க பள்ளிகளில் நடத்தப்படும் ஒருமைப்பாட்டு வாரத்தை எதிர்க்கும் டிஏபி யின் நடவடிக்கைக்கு பாஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறையினால் நசுக்கப்படும் மக்களுக்கு இனம், சமயப் பேதமின்றி மலேசியா தனது தார்மீக ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தின மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் மலேசியாவின் நடவடிக்கையை குறைகூறி வரும் டிஏபி தலைவர்கள் தார்மீக ஆதரவின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்று பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நஸ்ருடின் ஹாஸ்ஸான் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் நடத்தப்படும் பாலஸ்தீன மக்களுக்கான ஒருமைப்பாட்டு ஆதரவு இயக்கமானது மாணவமணிகள் மத்தியில் இளம் பிராயத்திலேயே மனிதாபிமானத்தை ஊட்டும் திட்டமாகும். அதனை வன்செயலுடன் ஒப்பிட்டு டிஏபி குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும் என்று நஸ்ருடின் ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.








